Thursday, January 29, 2009

தியாகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம்.


ஈழத் தமிழருக்காய்
உன் உயிரை மாய்த்த
சகோதரனே...
உன் துணிச்சலான வீரச்செயலை
நினைத்து கண்ணீரோடு பெருமைப்படுகின்றோம்..


உன்னைப்பெற்றவளும் தமிழன்னை..
அந்த தொப்புக்குள்கொடி உறவை நீ
உலகிற்கிற்கு உணர்த்திச் சென்றுள்ளாய்..
இன்னுமொரு தியாகத்தீபம் திலீபனை
உன் வடிவில் காண்கின்றோம்..முத்துக்குமாரா..
உன் இறப்பு..
ஈழத் தமிழருக்காக குரல் கொடுப்போரைவிடுத்து..
கண்டும் காணாதது போல இருக்கும்....
அரசியல் வாதிகளுக்கு வேண்டுமானால்
மிகச் சாதாரணமாகயிருக்கலாம்..


உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழருக்கும்..
உன் இழப்பால் இன்னும் அதிகமான தமிழர்களை
இழந்த உணர்வுதான். என்றோ ஒரு நாள் சரித்திரம்...
சொல்லும் என்றில்லை. இன்றே உன் சரித்திரம்..
உலகத்து தமிழ் மக்கள் மத்தியில் படைக்கப்படுகின்றது..


நீ காட்டிய வழியை ஏற்று இனியும் எந்த உறவும்...
தீயில் கருகி உடலை மாய்க்க வேண்டாம்..
உன் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் வாழவேண்டும்..
அதுவே அனைத்து அரசாங்கத்தையும் விழிக்கச்செய்யும்.
ஒரு தீக்குச்சியால் உன் உடலை மாய்த்துக்கொண்டாய்..
ஒரு பேனாவால் பல உயிர்களை இனங்காட்டிக்கொடுத்தாய்..
நீ கொழுத்தியது உன் உடலை அல்ல
பல முகமூடி மனிதர்களையும் சேர்த்துக் கொழுத்திவிட்டாய்..
திருந்துவார்களா திரும்பிப் பார்ப்பார்களா...
இருந்தும் உன் இறப்பின் பின்னால்
இன்னும் நாமும் உயிரோடுதான்...
இருக்கும் வரை உரிமைக்காப் போராடுவோம்..
வாழ்க முத்துக்குமாரா...

உலகத்து அனைத்து தமிழ் மக்கள் சார்பாக.....
உன் பெற்றோருக்கும், உறவுகளுக்கும் ஆழ்ந்த அநுதாபங்களும்..
எங்கள் கண்ணீர் அஞ்சலிகளும், ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளும்.

Thursday, January 22, 2009

இரங்கி வா கடவுளே இரங்கி வா...




ஆண்டவா இங்க பார் ஐயா...
அழும் குரல்களின் அவலங்கள் கேட்கலையா..
அநியாயமாக இழக்கின்றோம் பார் ஐயா..
சொந்தங்கள் செத்து மடிவது உனக்கு தெரியலையா..

யாரிடம் போவோம் சொல்லய்யா..
படுத்துறங்கும் வேளையிலும்
செல் போட்டு தாக்குவது உனக்குத் தெரியலையா..
சொல்லய்யா பதில் சொல்லய்யா..

நீ நடந்த வீதி எங்கும் தீ வந்து எரிகிறதே..
பாதி தூரம் பாதுகாப்பு என்று செல்லும் போது..
பகைவர் வீசிய குண்டினால் பாதிஉயிர் போய் துடிக்குதய்யா..
பார்த்துக்கொண்டு இருக்க உனக்கென்ன கல் மனசா தெய்வமே...


பால் குடி ஈரம் காயாத பச்சக்குழந்தைகள் கூட
பாதகன் போட்ட குண்டுகளுக்கு பலியாகிறதே...
பார்த்துக்கொண்டு இருக்காதே இறைவா..
இருகரம் உயர்த்திக் கும்புடுகிறேன்..

இரங்கி வா கடவுளே இரங்கி வா...
தப்பேதும் செய்யாத தமிழர்களை தண்டிக்காதே..
வளரும் காலத்தில் மலராமல் மடிந்து போகும் தமிழை..
வந்தே நீயும் காத்திடு...பகைவன் கொலை வெறியை தடுத்து நிறுத்திடு.

Friday, January 16, 2009

நம்பிக்கை வைப்போம்..


காற்றே நீயும் சேதி போய்
சொல்லாயோ...
கடலலையே நீயும் மௌனமாய்
கரைவந்துசேர்வாயோ...

நாட்டுப்பிரச்சனையால்
நாளும் மக்கள் படும் துன்பம்
நாளையாவது குறையாதோ..

கோழையாய் வாழாமல் இருக்க
நாளைய சமுதாயம் சரித்திரம்
படைத்திடுமோ..

புத்தகம் தூக்கும் பையிலே
மாற்றிக்க உடுப்பு மட்டும்
இருக்கும் நிலைதான் மாறுமா..?

வானமும் நமக்கு இன்று சொந்தம்
வாழ்வில் கிடைத்திடுமே
வசந்தமும் என்றும்..

அல்லறும் தமிழினம் இனி
அலையவேண்டியதில்லை..
அகதி என்ற சொல்லுக்கு அவசியமுமில்லை.

சொல்லொண்ணாத் துயரங்கள்
சேர்ந்தது போதும்..
சொந்தங்கள் வேறிடம் இருந்தாலும்.
பற்றிடம் அங்கே வைத்தே தீரும்..

காற்றே நீயும் இச் சேதி
கொண்டு செல்வாயோ..
கடலலையே நீயும் கவலை
இன்றி எம்மக்கள் உறங்க
மௌனமாய் கரைவந்துசேராயோ
..

2007 ..மார்கழி 2 ல்...வன்கூவர் மாநகரில் நடைபெற்ற மாவீரர்

(2007 ..மார்கழி 2 ல்...வன்கூவர் மாநகரில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வின் போது என்னால் வாசிக்கப்பட்டது.)

இச் சபையில் வருகை தந்திருக்கும் அனைத்துப் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும், மறைந்த வீரர்களுக்கும், எனக்கு இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய தமிழ் நெஞ்சங்களுக்கும், என் இறைவணக்க ஆசியோடு அன்பான மாலை வணக்கங்கள்.

உங்கள் முன் என் சிற்றறிவுக்கு ஏற்ப மாவீரர் கவிதை.

வணக்கம்.


அமைதி எமக்கருள வேண்டி
அஞ்சா நெஞ்சமதாய் நின்ற
எமதருமை சகோதரர்களான மா வீரர்களே....
ஆராத்துயரில் எமை ஆற்றிப்போனதென்ன..?
ஆரறிவார் எம்மினம் படும் வேதனைகளை..?

நஞ்சுக் குப்பியை மாலையாக்கி
காலமெல்லாம், காட்டை வீடாக்கி..
கல்லும் முள்ளும் உன் உடன்பிறப்பாக்கி..
காற்றும் மழையும் உன்உற்ற தோழனாக்கி..

பாம்பும், பலினக் கொடுமை விலங்கும் உன்
பாதத்தில் பணிவிடைசெய்யும் உறவாக்கி
பகலும் இரவும் பசிமறந்து ருசி அற்று
பழக்கப்பட்ட தொன்றாக்கி
நாற்றிசையும் கண்கள் சுழற தேசத்திற்காய்

உங்கள் வாசனைகள் துறந்த எம் வீரமைந்தர்களே..
நாளெல்லாம் ஈழம் காக்க
அண்ணன் வழி நன்றே சென்றே
தமிஈழம் காண விழி திறந்து துயில் கொண்டீரோ...

ஆண்டாண்டு காலம் அவஸ்தைகள் பட்டது போதும் என்று
எதிர் கொண்ட பகையை விரட்டியடித்து
எதிர் வரும் காலம் எமதாகும்
என்றே கூறி நன்றே மண்முத்தமிட்டு உயிர் துறந்தீரோ..

தமிழன்னை அவள் ஈன்றெடுத்தாள் உன்னை
தமிஈழம் ஈன்றெடுக்க அர்பணித்தாய் உயிரை..
மண்ணுக்குள் நீங்கள் புதைக்கப்படவில்லை..தோழர்களே..
தமிழ் மண்ணில் விதைக்கப்பட்ட வித்துக்கள் தான் தாங்கள்.

எதிர் கொள்ளா நிலையை நயவஞ்சகமாக்கி
தோல்விதனை கவ்வி ஓட்டம் பிடித்த ஓநாய்கள்..
நேர் எதிர்கொள்ள துணிவில்லை..
வான் தொல்லை குண்டு போட்டு
தொலை தூரத்தே நின்றுதாக்கி உங்களோடு
அப்பாவித் தமிழர்களையும் கொன்றழித்தனரே...


கல்லறைகள் கட்டி நாம் உங்களைக் காக்கவில்லை..
அனுதினமும் பூக்கள் கொண்டு பூஜிக்கவில்லை.
நெஞ்சாற நேசிக்கின்றோம் உள்ளத்தில் வைத்து பூஜிக்கின்றோம்..
உங்களைப்போல் ஓர் பிறவி
மறு பிறவியிலாவது பெற்றிட ஆசைப்படுகின்றோம்..

நெஞ்சறையில் தித்தமும் தாங்கி
குருதியால் தோய்ந்த ஈரத் தமிழ் மண் மீட்க
நெஞ்சுருக ஈழம் காக்க வேண்டிநிற்கின்றோம்.
நெடுநாள் ஆசையிது...நிறைவேற வேண்டிநிற்கின்றோம்.

ஆண்டவா யாரறிவார் எம்சோகம்..?

போருக்குப்போய் மாய்ந்தீர் மாவீரர்களே..
பொறுத்திருக்கின்றோம் மனதைத்தேற்றி...
ஆனால்....

அடுத்தடுத்தாய் இன்னல்கள் இமைமூடி இமைக்கமுதல்
கண்ணெதிரே தாக்குதல்கள்..
பாரினில் பாரிய குண்டுகள்போட்டு
படுத்த படுக்கையில் வெட்டிச்சாய்த்து..

வெள்ளை உள்ளங்கள் வெந்நிறத்தில்
பள்ளிக்கூடம் செல்ல
செங்குருதி தோய்ந்த நிலையில்
உடல்கள சிதறி அங்கங்கள் சிதறுண்டு போகவைத்ததும்...
அயராது உழைத்த தமிழ்ஆண்மகன்
அகப்பட்டால் போதுமே அவனுக்கு

கொட்டியா எனக் முத்திரை குத்தி
கையில் துப்பாக்கி திணித்து
வீண் பழி சுமத்தி புகைப்படமும் எடுத்து
பொன்னான தமிழனை புண்ணாக்கி சாகடித்து

அக்கா, என்ன தங்கை என்ன அம்மா கூட
போதுமென்று அவனவன் இஷ்டதிற்கு
காட்டுமிராண்டித்தனமாக வெறித்தனங்களை
காட்டி கும்மாளம் போட்டும்

நாட்டில் இன்னும் காவல் என்று பொய்யுரைத்து
காவல் காக்கும் அந்த அசுரர்கள் வதையில்
சிக்குண்டு சிதறுண்டு போன இத்தனை
தியாக தீபங்களும் மாவீரர்கள்தான்.
போருக்குப்போகாவிடினும் தமிழுக்காய்
உயிர் நீத்த அத்தனை உயிர்களும்
எம் மண்ணின் மாவீரர்கள்தான்.

தமிழ் படும் பாட்டை
குண்டு போட்டு தாக்கும் நாட்டை
கண்டவரும் உண்டு, கேட்டவரும் உண்டு
அதில் கொன்று குவிக்கப்பட்டவருமுண்டு.

என்று தணியும் இப்போர்...?
என்றாவது மலரும் தமிழீழம்.
அன்று நமக்குச் சுதந்திரம்
அண்ணனோடு நாமும் பெற்றிடுவோம் தமிழ்அவதாரம்.

விழ விழ எழுந்திருப்போம்..
விடியும் அந்நாள் காத்திருப்போம்.
தளராது, ஓயாது அடுத்த சந்ததியினருக்காக
உலகெங்கும் தமிழ் ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்.

வாழ்க மாவீரர்களே..
உங்களின், எங்களின் இலட்சியக்
கொள்கை அது ஒன்றே என்றும்.

வெல்வோம் வெகு சீக்கிரத்தில்.

வாழ்க தமிழ்!!!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.!